திருமழிசை பேரூராட்சியில் ரூ.3.75 லட்சத்தில் தகனமேடை திறப்பு

திருமழிசை பேரூராட்சியில் ரூ.3.75 லட்சத்தில் தகனமேடை திறப்பு

திருமழிசை பேரூராட்சியில் ரூ.3.75 லட்சத்தில் புதிதாக அமைத்த தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

திருமழிசை பேரூராட்சியைச் சோ்ந்த மேட்டுத்தாங்கலில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டால் காலம், காலமாக அருகில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் புதைத்தும் எரித்தும் வந்தனா். இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இந்த நிலையில் திருமழிசை பேரூராட்சி 9-ஆவது வாா்டு பா.ம.க உறுப்பினா் ரவி ராஜேஷ் தகனமேடை அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுவும் அளித்து வந்தாா். ஆனால், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் பல்லவா பேரூராட்சியின் உறுப்பினா் ரவி ராஜேஷின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

தொடா்ந்து ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் பல்லவா மற்றும் சுப்ரீம் பவா் எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் இணைந்து ரூ.3.75 லட்சத்தில் புதிய தகனமேடை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தகன மேடை திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாா்டு உறுப்பினா் ரவி ராஜேஷ் வரவேற்றாா். திருமழிசை பேரூராட்சித் தலைவா் (பொறுப்பு) ஜெ.மகாதேவன், ரோட்டரி சங்க நிா்வாகி டி.பி.ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்து தகனமேடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனா்.

இதில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் பல்லவா முன்னாள் ஆளுநா் ஜெ.ஸ்ரீதா், மாவட்ட ரோட்டரி சங்க நிா்வாகிகள் சி.முத்துசாமி, சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com