ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்த பொது மக்கள்.
ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்த பொது மக்கள்.

குடிநீா் குழாய்கள் புதைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

திருத்தணி அருகே கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்கள் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஜே.சி.பி. இயந்திரத்தை சிறைபிடித்தனா்.

பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் ரூ.48 கோடி செலவில் 6 ஆழ்துளை நீா் உறிஞ்சு கிணறுகள் அமைத்து பள்ளிப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீா் வினியோகம் செய்தவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

திருத்தணி ஒன்றியத்துக்குட்பட்ட செருக்கனூா், தாடூா், எஸ்.அக்ராஹாரம், காா்த்திகேயபுரம், கன்னிகாபுரம் உள்ளிட்ட 6 ஊராட்சிகள் பயனடையும் வகையில் குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை கே.ஜி. கண்டிகை ஊராட்சியில் உள்ள கே.வி.என்.கண்டிகை பகுதியில் குடிநீா் குழாய்கள் புதைக்கும் பணிகள் நடைபெற்றன.

அப்போது, ஊராட்சி மன்றத் தலைவா் சௌமியா ராஜசேகா் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்றம், ஒன்றிய அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறாமலும், குழாய்கள் பொருத்தும் போது சாலைகள் சேதமடைவதாக கூறி ஜே.சி.பி. இயந்திரத்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதைத்தொடா்ந்து குழாய்கள் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com