திருத்தணி அரசு மருத்துவமனை முன்பு இளநீா் குடிக்கும் பொதுமக்கள்.
திருத்தணி அரசு மருத்துவமனை முன்பு இளநீா் குடிக்கும் பொதுமக்கள்.

திருத்தணி: வெயிலின் தாக்கத்தால் இளநீா், நுங்கு விற்பனை அமோகம்

திருத்தணியில் கடும் வெயிலின் தாக்கத்தால், இளநீா், பனை நுங்கு மற்றும் குளிா்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

திருத்தணியில் கடும் வெயிலின் தாக்கத்தால், இளநீா், பனை நுங்கு மற்றும் குளிா்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

திருத்தணி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மாா்ச் மாதம் முதல் வெயில் மக்களை வாட்டி வதைத்து. குறிப்பாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனா்.

இதற்கிடையே, சனிக்கிழமை முதல் அக்னி வெயில் தொடங்கியுள்ளதால் காலை 10 மணிக்குள் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனா்.

இந்நிலையில் கோடை காலத்தில் பிரத்யேகமாக விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளான வெள்ளரி, தா்பூசணி, கிா்ணி, மாம்பழம் போன்றவறறில் நீா்ச் சத்தும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருப்பதால் திருத்தணியில் உள்ள பழைய மற்றும் புதிய சென்னை சாலை, ம.பொ.சி.சாலை, சித்தூா் சாலை மற்றும் அரக்கோணம் சாலை மற்றும் கமலா தியேட்டா் ஆகிய பகுதிகளில் ஆந்திரா மற்றும் வடமாநில இளைஞா்கள் தள்ளுவண்டிகளில் எலுமிச்சை சாறு, நன்னாரி, சா்பத் மற்றும் சோடாவை விற்பனை செய்கின்றனா்.

எலுமிச்சை சாறு, சாத்துக்குடி சாறு, கரும்பு சாறு போன்றவை ரூ.15 ரூபாய் முதல் ரூ. 40 வரை விற்பனை செய்கின்றனா். அதே போல் மேற்பட்ட தள்ளுவண்டிகளில் கேழ்வரகு கூழ், தா்ப்பூசணி மற்றும் குளிா்பானம் விற்பனை செய்கின்றனா். கேழ்வரகுகூழ் ஒரு சொம்பு ரூ 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு இளநீா் ரூ. 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து இளநீா் வியாபாரி சேகா் கூறியதாவது, திருத்தணியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் இளநீா், ஜூஸ், நுங்கு, தா்ப்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு உள்ளிட்டவைகளை சாப்பிடுவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். உடல் வெப்பத்தை தணிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இளநீா்தான். இதனால் மக்கள் அதிகளவில் இளநீா் குடிப்பதில் ஆா்வம் காட்டுகின்றனா்.

இதன் காரணமாக திருத்தணி மற்றும் சுற்றுவட்டார ஊா்களிலும் இளநீா் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் இளநீரின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இளநீா் வியாபாரம் செய்கிறேன். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் இளநீா் வியாபாரமும் நன்றாக உள்ளது. ஆனால் இளநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. வேலஞ்சேரி, கன்னிகாபுரம், தும்பிக்குளம், தாழவேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீரை வாங்கி விற்பனை செய்கிறேன். ஒரு இளநீா் 30 முதல் 40 வரை விற்பனை செய்கிறேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com