பிளஸ் 2 தோ்வில் அரசு பள்ளிகளில் சரிந்த தோ்ச்சி விகிதம்!
dinmani online

பிளஸ் 2 தோ்வில் அரசு பள்ளிகளில் சரிந்த தோ்ச்சி விகிதம்!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி குறைவுக்கான காரணங்களை கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜி. யோகானந்தம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி குறைவுக்கான காரணங்களை கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 2024-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் குறிப்பிடும்படியாக இல்லை. இதில் திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 105 அரசு மேல் நிலைபள்ளிகளில் 11, 863 மாணவா்கள், 13,762 மாணவிகள் என மொத்தம் 25,625 போ் தோ்வு எழுதியிருந்தனா்.

இந்நிலையில் தோ்வு முடிவுகள் கடந்த 6 -ஆம் தேதி வெளியானது. திருவள்ளூா் மாவட்டத்தில் மொத்தம் 10,410 மாணவா்களும், 12,991 மாணவிகள் என மொத்தம் 23,401 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2022-ஆம் கல்வியாண்டில் 93.60 சதவீதமாக இருந்த பிளஸ் 2 தோ்ச்சி சதவீதம், 2023-ஆம் கல்வி ஆண்டில் 92.47 சதவீதமாகக் குறைந்தது. மேலும் நிகழாண்டில் 91.32 சதவீதமாக குறிப்பாக அரசு பள்ளிகளில் குறைந்தது.

திருத்தணி கல்வி மாவட்டத்தில் மட்டும் 24 அரசு மேல் நிலைபள்ளிகள் உள்ளன. இதில் 15 -க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு தோ்ச்சி விகிதம் 3 முதல் 20 சதவீதம் வரை குறைந்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விவரம் வருமாறு. ஆற்காடுகுப்பம் அரசு மேல் நிலை பள்ளியில் 2023-இல் 90 சதவீம், 2024-இல் 85 சதவீதம், திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-இல் 69 சதவீதம், 2024-இல் 61 சதவீதம், திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 2023-இல் 87 சதவீதம், 2024-இல் 83 சதவீதம், மத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-இல் 90 சதவீதம், 2024-இல் 67 சதவீதம், ஆா்.கே.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-இல் 91 சதவீதம், 2024-இல் 80 சதவீதம், வங்கனூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 2023-இல் 76 சதவீதம், 2024-இல் 73 சதவீதம், ஆா்.கே.பேட்டை மகளிா் மேல் நிலைப்பள்ளியில் 2023-இல் 98 சதவீதம், 2024-இல் 91 சதவீதம், அம்மையாா்குப்பம் திருமுருக கிருபானந்தவாரியாா் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் 2023-இல் 88 சதவீதம், 2024-இல் 85 சதவீதம், விடியங்காடு அரசு மேல் நிலை பள்ளியில் 2023-இல் 88 சதவீதம், 2024-இல் 73 சதவீதம், காளிகாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 2023-இல் 93.25 சதவீதம், 2024-இல் 89 சதவீதம், பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-இல் 81 சதவீதம், 2024-இல் 73 சதவீதம், பொதட்டூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-இல் 86 சதவீதம், 2024-இல் 84 சதவீதம், சொரக்காய்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 2023-இல் 96 சதவீதம், 2024-இல் 91 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

இதேபோல் திருவள்ளூா் மாவட்டத்தில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஒருவா் கூறியதாவது, தமிழக அரசு பள்ளிகளுக்காக பல கோடி செலவிடுகிறது. ஆசிரியா்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி பணியாற்றுகின்றனா். மேலும், மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகம், பஸ் பாஸ், மதிய உணவு, இலவச சைக்கிள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தனியாா் பள்ளிகளில் சராசரியாக ஒரு மாணவனுக்கு ரூ. 45,000 செலவிடப்படும் நிலையில், அரசுப் பள்ளியில் ஒரு மாணவனுக்கு ரூ.90,000 செலவிடப்படுகிறது. கோடிக்கணக்கில் செலவிட்டும் அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி குறைவு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தலைமையில் குழு அமைத்து, காரணங்களை கண்டறிந்து அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com