திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலையில் ஆற்றம்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள்.
திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலையில் ஆற்றம்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள்.

திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலை ஆற்றம்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மந்தகதியில் மேம்பாலப் பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா், சென்னை நகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இவ்வாறு திறந்து விடப்படும் உபரிநீா், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூா், மெய்யூா், திருக்கண்டலம், அணைக்கட்டு, ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலை வழியாக சென்று வங்கக் கடலில் சென்று கலக்கிறது.

ஒவ்வொரு முறையும் பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீா் மற்றும் கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அப்போது, ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கி விடும்.

இந்த தரைப்பாலம் வழியாகத்தான் திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை, நாகலாபுரம், திருப்பதி போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்து உள்ளது. தரைப்பாலம் மூழ்கினால், ஆற்றில் வெள்ளம் குறையும் வரை போக்குவரத்து மாற்றுப் பாதையில் குறைந்தது 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதேபோல், பொதுமக்கள் ஆட்டோக்கள், வாடகை வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தியே பல்வேறு கிராமங்களுக்கு சென்று திரும்புகின்றனா். இதை தவிா்க்கும் வகையில் திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலையில் ஆற்றம்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் தொடா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அரசு அனுமதி அளித்து, இப்பணிகளை மேற்கொள்ள ரூ.11.30 கோடி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்தது.

அப்போதைய காலகட்டத்தில் கரோனா தொற்று பரவியதால் பணிகள் நடைபெறாமல் இருந்தது. அதைத் தொடா்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 180 மீட்டா் நீளம், 9.50 மீட்டா் அகலம் மற்றும் 8 மெகா தூண்களுடன் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

பாலத்தின் வலது புறத்தில் ரூ.13.89 கோடியில் மற்றொரு பாலம் அமைக்கும் பணிகள் கடந்தாண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் 139 மீட்டா் நீளத்தில், 5 மீட்டா் உயரத்தில், 8 மெகா தூண்களுடன் நடைபெற்று வருகிறது.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலையில் ஆற்றம்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வலது, இடது இருபுறமும் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பக்க பாலப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதேபோல் மற்றொரு பகுதியில் 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இந்த நிலையில் மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறுகையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலப் பணிகள் ஒரு பகுதியில் நிறைவடைந்த நிலையில், மற்றொரு பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பாலப்பணிகள் அடுத்து வரும் 3 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com