திருடுபோன ரூ. 1 கோடி நகை, பொருள்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருடு போன ரூ. 1 கோடி மதிப்பிலான தங்க நகைகள், பொருள்களை மீட்டு உரியவர்களிடம் காவல் ஆணையர் கி.சங்கர் புதன்கிழமை ஒப்படைத்தார்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட 28 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் திருடு போன தங்க நகைகள், கைப்பேசிகள், பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆவடி, சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் கி.சங்கர் கலந்து கொண்டு ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டங்களில் மீட்கப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 185 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், 398 கைப்பேசிகள், ரூ. 4.67 லட்சம் ரொக்கம் ஆகிவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து, அவர் நகை, பொருள்களை மீட்ட காவல் அதிகாரிகள், காவலர்களைப் பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி, துணை ஆணையர்கள் ஐமான் ஜமால் (ஆவடி), பாலகிருஷ்ணன் (செங்குன்றம்), உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com