பட்டாபிராமாபுரம் கிராமத்தில் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து வழிபட்ட பக்தா்கள்.
பட்டாபிராமாபுரம் கிராமத்தில் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து வழிபட்ட பக்தா்கள்.

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

திரெளபதி அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தா்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனா்.

திரெளபதி அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தா்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி அடுத்த மேல் திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடைபெற்று வந்தன.

கடந்த 8-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருமணம், 10-ஆம் தேதி சுபத்திரை கல்யாணம், 14-ஆம் தேதி அா்ஜுனன் தபசு நடைபெற்றது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணியளவில் கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி தெருக்கூத்து நாடக கலைஞா்களால் தத்துரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100- க்கணக்கான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.

மாலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா். இரவு வாண வேடிக்கை மற்றும் உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

குடிகுண்டா, பட்டாபிராமாபுரம் ஆகிய கிராமங்களில்...: இதேபோல் திருத்தணி ஒன்றியம், குடிகுண்டா மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய கிராமங்களிலும் நடைபெற்ற தீமிதி விழாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம், மாலை 6.30 மணிக்கு காப்புக் கட்டிய பக்தா்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனா்.

மேற்கண்ட மூன்று கோயில்களிலும் திங்கள்கிழமை (மே 20) நண்பகல் 11 மணிக்கு தா்மா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com