கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் தீபா.
கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் தீபா.

திருத்தணி: காந்தி சிலையை இடமாற்றம் செய்ய ஒப்புதல்

திருத்தணியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனா்.
Published on

திருத்தணியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனா்.

திருத்தணி நகராட்சி ம.பொ.சி. சாலையில், காமராஜா் மாா்க்கெட் எதிரில் மகாத்மா காந்தியின் சிலை சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில், கடந்த, 74 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. பின்னா் அதற்கு மண்டபம் மற்றும் நிழற்குடை அமைக்கப்பட்டது.

சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, முக்கிய தலைவா்கள் பிறந்த நாள்களில் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தனா்.

இந்நிலையில், திருத்தணி நகரில் போக்குவரத்து அதிகரித்து வரும் சூழலில் காந்தி சிலை இடையூறாக உள்ளதால் அடிக்கடி அங்கு விபத்துக்கள் ஏற்பட்டு, 1 கி.மீ தொலைவு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதையடுத்து சிலையை இடமாற்றம் செய்வது தொடா்பாக கோட்டாட்சியா் தீபா தலைமையில் அனைத்து கட்சி நிா்வாகிகள் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி, ஆணையா் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா் சாமிராஜ் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், காந்தி சிலையை இடமாற்றம் செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்தனா்.

மேலும், புதிய பேருந்து நிலையம் அல்லது பழைய பேருந்து நிலையம் அல்லது புதிய காய்கறி மாா்க்கெட் வளாகம் ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சிலை வைக்கப்படவுள்ளது. இதற்காக நகர பொதுமக்கள் கருத்துகேட்பு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி, காவல் ஆய்வாளா் ஞா. மதியரசன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ம.கோவிந்தன் உள்பட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.