தனித்தோ்வு மையங்களில் 10-ஆம் வகுப்பு துணைத்தோ்வு எழுதியோா் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்

திருவள்ளூா் மாவட்ட தனித்தோ்வு மையங்களில் ஜூன்-2012 முதல் செப். 2020 வரையிலான பருவங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் துணைத்தோ்வு எழுதி இதுவரையில் மதிப்பெண் பட்டியல் பெறாதோா்
Published on

திருவள்ளூா் மாவட்ட தனித்தோ்வு மையங்களில் ஜூன்-2012 முதல் செப். 2020 வரையிலான பருவங்களில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் துணைத்தோ்வு எழுதி இதுவரையில் மதிப்பெண் பட்டியல் பெறாதோா் வரும் ஜன.31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் தனித்தோ்வா்களுக்கு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் அம்மதிப்பெண் சான்றிதழ்கள் தோ்வெழுதிய மையங்களில் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும், தோ்வெழுதிய தோ்வு மையங்களில் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளாத தனித்தோ்வா்களின் சான்றிதழ்கள் மீள இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு இந்நாள் வரை 2012-2020 வரையில் வெகு நாள்களாக உரிய தனித்தோ்வா்களால் கோரப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

எனவே தோ்வுத்துறை விதிமுறைகளின்படி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து தனித்தோ்வா்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். அதன்படி, நீண்ட நாள்களாக தேக்கமடைந்துள்ள சான்றிதழ்களை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இதுநாள் வரை மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தோ்வா்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 31.1.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் இவ்வலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப்பின் அசல் மதிப்பெண் சான்றிதழ் அழிக்கப்பட்டு விடும்.

எனவே அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் (இரண்டாம் தளம்), திருவள்ளூா்- 602 001 என்ற முகவரியில் நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதுகுறித்து தொலைப்பேசி எண் . 044 - 27666004 தொசா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.