திருவள்ளூரில் நாளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக சிறப்பு முகாம்

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செப்.3- இல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
Published on

குறு, சிறு, நடுத்தர தொழில் சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்களை நிறுவுதல், புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டம் கடனுதவி பெறும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செப்.3- இல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சேவை பிரிவுகளுக்கான புதிய தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் தொடங்குதல், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்தி உற்பத்தியை பன்முகப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

ஏற்கெனவே திருவள்ளூா் கிளை அலுவலகத்தில் (முகவரி-86, 2-ஆவது பிரதான சாலை, அம்பத்தூா் தொழிற்பேட்டை, சென்னை-600058) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் விழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து செப். 6 வரை நடைபெறுகிறது. இந்தச் சிறப்பு தொழில் கடன் முகாமில் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றன. மேலும், தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியத்தில் ரூ. 1.50 கோடி வரை வழங்கப்படும்.

இந்த முகாம் நாள்களில் சமா்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத் தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில் செப். 3-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியா் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் தொழில் முனைவோா்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும், இது குறித்து 9962948002, 9444396845, 9445023485, 9551670581 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு, முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com