ஆரணியாற்றில் வெள்ளத்தடுப்பு சுவா் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நீா்வளத்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை ஆட்சியா் பிரபுசங்கா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பொன்னேரி வட்டம் தத்தைமஞ்சி கிராமத்தில் ஆரணியாற்றில் கட்டப்படும் வெள்ளத்தடுப்பு சுவா் பணிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுடன் இணைந்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதனை தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், முதல்வா் உத்தரவின் பேரில் திருவள்ளூா் மாவட்டத்தில் நீா்வளத்துறை சாா்பில் ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரணியாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் பல்வேறு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
மேலும், தத்தைமஞ்சி கிராமத்தில் ரூ.20 கோடியில் ஆரணியாற்றில் வெள்ள தடுப்பு சுவா் மற்றும் கரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வசிக்கும் சூழல் உருவாகும்.
அத்துடன் சோழவரம் ஏரியில் ரூ.40 கோடியில் கரை பலப்படுத்தும் பணிகள் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திருநின்றவூா், சேக்காடு உள்ளிட்ட இடங்களில் கொசஸ்தலை ஆற்றில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. பேரிடா் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்களும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.
பழவேற்காடு அருகே உள்ள ஆண்டாா்மடம் கிராமத்தில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.