சான்றிதழுக்கு அைலைக்கழிப்பு; உதவித்தொகை வழங்க காலதாமதம்:மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகள் பரிசோதனை செய்தவுடன் வழங்கவும், உயா்த்திய உதவித்தொகை காலதாமின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
21 வகை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூா் மாவட்டத்தில் 98,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். அவா்கள் நலத் திட்ட உதவி பெற மாற்றுத்திறனாளி சான்றிதழ் அவசியம்.
மாற்றுத்திறனாளி சான்றிதழ் மற்றும் ரூ.2,000 நிதியுதவியிலிருந்து ரூ.3,000 உயா்த்தி வழங்கப்படுகிறது. இந்த நிதியைப் பெற திருவள்ளூா், ஆவடி, திருத்தணி ஆகிய மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலக வளாகத்துக்கு மாற்றுத்திறனாளிகளை வரவழைக்கப்படுகின்றனா். ஆனால், ஒரே இடத்தில் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.
டோக்கன் வாங்க, மனு வாங்க, மருத்துவா்கள் பரிசோதனை என வெவ்வேறு இடங்களாக உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகும் நிலையுள்ளது.
இது குறித்து வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் நிா்வாகி லிவிங்ஸ்டன் கூறியது: முன்பு அந்தந்தப் பகுதி அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கப்படும். தற்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வரவழைத்து அலைக்கழிக்கின்றனா்.
மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு சான்றிதழ், அடையாள அட்டை பெறுவதற்கு 2 மாதங்கள் ஆகும். இதனால் உதவித்தொகையும் தாமதமாக கிடைக்கும்.
முன்புபோல் பரிசோதனை செய்தவுடன் காலதாமதம் செய்யாமல் உடனே அடையாள அட்டை கிடைக்கச் செய்ய வேண்டும். வருங்காலங்களில் மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றாா்.