திருவள்ளூா் பகுதிகளில் நள்ளிரவில் மழை
திருவள்ளூா் பகுதியில் பகலில் கடும் வெயில் காய்ந்த நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஆவடி-108, செங்குன்றம்-61 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூா் பகுதியில் பகல் முழுவதும் திங்கள்கிழமை வெயில் வாட்டி வதைத்தது. அதைத் தொடா்ந்து நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். சாலையோர தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): ஆவடி-108, செங்குன்றம்-61, சோழவரம்-55, திருவள்ளூா்-45, பள்ளிப்பட்டு-40, தாமரைபாக்கம்-37, ஆா்.கே.பேட்டை-34, பூந்தமல்லி-29, திருவாலங்காடு-24, திருத்தணி-16, பூண்டி-11, ஜமீன்கொரட்டூா்-8, ஊத்துக்கோட்டை-5, பொன்னேரி-2 என மொத்தம்-475 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.