பட்டாபிராமில் ரூ.78 கோடியில் ரயில்வே மேம்பாலம்: அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

ஆவடி அருகே ரூ.78.31 கோடியில் கட்டப்பட்ட பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் ஆர்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்தார்.
Published on
Updated on
1 min read

ஆவடி அருகே ரூ.78.31 கோடியில் கட்டப்பட்ட பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் ஆர்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்தார்.

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை பட்டாபிராம் ரயில் கடவுப்பாதையில் மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து, ரூ.52.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டது. இதையடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.

எனினும் நில எடுப்புப் பணி, ரயில்வே துறையின் மேம்பாலம் கட்டி முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

பின்னர், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பால் வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர், இந்த மேம்பாலப் பணிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து, மேம்பால பணிகளை மீண்டும் தொடங்கப்பட்டன. இப்பணிகளுக்கு மேலும் ரூ.26.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆக மொத்தம் ரூ.78.31 கோடி ஒதுக்கப்பட்டது.

தற்போது ரயில்வே கடவுப்பாதையில் குறிப்பிட்ட பகுதியில் பணிகள் முடிவடையாமல் உள்ளன. இப்பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, முடிவடைந்த பகுதியில் பட்டாபிராம் மேம்பாலத்தைத் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர்

த.பிரபு சங்கர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் மேம்பாலத்தை பார்வையிட்டு, பணி முடிந்த பகுதியைத் திறக்க முடிவு செய்தார். இந்த நிலையில், புதன்கிழமை பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சா.மு.நாசர் (ஆவடி), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி மேம்பாலத்தில் வாகன போக்குவரத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆணையர் எஸ்.கந்தசாமி காவல் துறை துணை ஆணையர் ஐமான் ஜமால், திருவள்ளூர் வருவாய்க் கோட்டாட்சியர் கற்பகம், நெடுஞ்சாலைத் துறை தலைமைச் செயற்பொறியாளர் தேவராஜ், கோட்டப் பொறியாளர் சிவசேனா, திமுக நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், சண்.பிரகாஷ், பொன்.விஜயன், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், அமுதா சேகர், கு.சேகர், பெ.வினோத், தண்டுரை கோபி, வி.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.