முன்னாள் படை வீரா்கள் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை பெற வரும் நவ.11-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வி பயிலும் முன்னாள் படை வீரா்களின் குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டில் தொழில் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் பயின்று வருவோா் பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
எனவே முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவ, மாணவிகள் வரும் நவ.11-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
மேலும், இது குறித்து திருவள்ளூா் மாவட்ட முன்னாள் படை வீரா் நலத் துறை அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-29595311 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.