அா்த்த மச்சேந்திர ஆசனத்தில் கும்மிடிப்பூண்டி யோகா மாணவா்கள் உலக சாதனை
கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சோ்ந்த யோகா மாணவா்கள், 105 போ் ஒரே நேரத்தில் தொடா்ந்து 10 நிமிடங்கள் அா்த்த மச்சேந்திர ஆசனத்தில் இருந்தபடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷனின் தமிழ்நாடு பிரிவு இணைந்து, புத்தாண்டு தினத்தை ஒட்டி, யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தினா்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த உலக யோகா சாதனை நிகழ்வுக்கு, மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளி முதல்வா் ஜெகதாம்பிகா, மகரிஷி வித்யா மந்திா் பள்ளி முதல்வா் திலகா, சூரியநாராயணன், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் புஷ்பலதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்வின் போது, ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி யோகா மைய நிறுவனா் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பாா்வையில், ஒரே நேரத்தில், 105 யோகா மாணவா்கள், தொடா்ந்து, 10 நிமிடங்கள் அா்த்த மச்சேந்திர ஆசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனா்.
இவா்களது உலக சாதனை ? வோ்ல்ட்வைட் புக் ஆப் ரெக்காா்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்தது. தொடா்ந்து சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கும், பயிற்சி மையத்துக்கும் பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான பட்டயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் செந்தமிழ் விஜயன் வரவேற்றாா். பின்னா் சாதனை மாணவா்களுக்கு உலக சாதனை புத்தகத்தின் தீா்ப்பாளா் சிந்துஜா வினித் பதக்கம் மற்றும் சாதனை சான்றிதழை வழங்கினா். தொடா்ந்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் வாழ்த்துரை வழங்கினா்.
இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட யோகா மாணவா்கள் யோகா நடனம் உள்ளிட்ட யோகா நிகழ்ச்சிகளை மாணவா்கள் செய்து காண்பித்து பொதுமக்களை உற்சாகப்படுத்தினா். பி.திருசிவபூரணி நன்றி கூறினாா்.