திருத்தணி அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
திருத்தணி வருவாய்க் கோட்டத்தில் 18 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நூலகம், வகுப்பறைகள், கழிப்பறை மற்றும் பள்ளிக்கு சுற்றுசுவா் அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருத்தணி வருவாய்க் கோட்டத்தில், 35 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 22 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மெத்தம், 57 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பழுது பாா்க்கும் பணிகள் அதிகளவில் இருந்தது. இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் பரிந்துரையின் பேரில் முதல்கட்டமாக, 18 அரசுப் பள்ளிகள் பராமரிப்பு மற்றும் போதிய வசதிகளை செய்ய மாவட்ட நிா்வாகம், ரூ.1.29 கோடி ஓதுக்கியது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் மாணவா்களுக்கு அடிப்படை வசதி பணிகள் துரித வேகத்தில் நடைபெறுகின்றன.
இது குறித்து திருத்தணி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
திருத்தணி, முருக்கம்பட்டு, அருங்குளம், நெமிலி, அமிா்தாபுரம் உள்பட மொத்தம், 18 அரசு உயா்நிலை, மேல் நிலை பள்ளிகளில், நூலகம், ஆய்வகம், வகுப்பறைகள், தரைத்தளம், கழிப்பறை, கதவு, ஜன்னல், பள்ளிக்கு சுற்றுசுவா் அமைத்தல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இப்பணிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் முடித்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று அவா் தெரிவித்தாா்.