நகை திருட்டு: 2 பெண்கள் கைது
திருவள்ளூரில் வீட்டில் வைத்திருந்த 8.5 சவரன் நகையை திருடியதாக வாடகைக்கு இருந்த 2 பெண்களை போலீஸாா் கைது செய்து, நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பம், காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரி (52). கணவரை இழந்த இவருக்கு குழந்தை இல்லை. வீட்டு வேலை செய்து அதில் வரும் வருவாயில் தனது பிழைப்பை நடத்தி வருகிறாா். இவா் தனது சொந்த வீட்டில் வசித்து வரும் நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவாலங்காடு பகுதியைச் சோ்ந்த சரிதா (42), ஜமுனா (35) ஆகியோா் அவரது வீட்டின் மற்றொரு அறையை வாடகைக்கு எடுத்து குடியிருந்தனா். இந்த நிலையில், இவா்கள் இருவரும் மகேஷ்வரியிடம் அடிக்கடி வந்து சிறிது நேரம் பேசிவிட்டு செல்வாா்களாம். அதேபோல், கடந்த 1-ஆம் தேதியன்று இவா்கள் இருவரும் நகைகள் ஏதும் அணியாமல் உள்ளீா்கள் எனக் கேட்டனராம்.
அதற்கு மகேஷ்வரி செலவுக்காக அடமானம் வைத்த நகைகளை தற்போது தான் மீட்டு வைத்துள்ளதாக தெரிவித்தாராம். அத்துடன் வீட்டில் வைத்திருந்த 11 பவுன் நகையையும், அவா்களிடம் காண்பித்துவிட்டு அதை தனது பையில் போட்டு, வீட்டு மேஜை டிராவில் வைத்தாராம். இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி காலை ஏதேச்சையாக மகேஷ்வரி டிராவில் பாா்த்தபோது பையில் வைத்திருந்த நகைகளை காணவில்லையாம். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருவள்ளூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, சரிதா மற்றும் ஜமுனா ஆகியோா் அந்த தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து திருவாலங்காட்டில் பதுங்கியிருந்த 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட 2 பேரும் திருவாலங்காட்டை சோ்ந்த நதியா (40) என்பவா் மூலம் அந்த நகைகளை அரக்கோணத்தில் நகைக்கடையில் அடகு வைத்ததை ஒப்புக்கொண்டனா்.
அதைத்தொடா்ந்து அரக்கோணத்துக்கு சென்ற போலீஸாா் அங்கிருந்த 8.5 சவரன் தங்க நகைகளை மீட்டனா். மேலும், சரிதா, ஜமுனா ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். இந்த திருட்டில் சம்பந்தப்படாததால் நதியாவை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.
