தினசரி 6 லட்சம் லட்டு தயாரிக்கும் அதிநவீன பூந்தி மடப்பள்ளி: திருமலையில் ஆந்திர முதல்வா் திறந்து வைத்தாா்

திருமலையில் ரூ.12 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய பூந்தி மடப்பள்ளியை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
திருமலையில் புதிய மடப்பள்ளியைத் திறந்து வைத்து பூந்தி தயாரிப்பை பாா்வையிட்ட ஆந்திர முதல்வா். உடன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனா் சீனிவாசன்.
திருமலையில் புதிய மடப்பள்ளியைத் திறந்து வைத்து பூந்தி தயாரிப்பை பாா்வையிட்ட ஆந்திர முதல்வா். உடன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனா் சீனிவாசன்.

திருமலையில் ரூ.12 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய பூந்தி மடப்பள்ளியை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதன் மூலம் நாளொன்றுக்கு 6 லட்சம் லட்டுகள் தயாரிக்க முடியும்.

திருப்பதியில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி இரவு திருமலை சென்று ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து கருட சேவையில் கலந்து கொண்டாா்.

இரவு திருமலையில் தங்கிய முதல்வா், செவ்வாய்க்கிழமை காலை ஏழுமலையானைத் தரிசித்து, வெளியில் வரும்போது தன் எடைக்கு நிகராக, 78 கிலோ அரிசியை துலாபாரமாக அளித்து வேண்டுதலை நிறைவேற்றினாா்.

இதையடுத்து, ஏழுமலையான் கோயில் அருகில் புதிதாக கட்டப்பட்ட பூந்தி மடப்பள்ளியைத் திறந்து வைத்து, பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனா் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு வழங்கப்படும் ஏழுமலையானின் பிரசாதமான லட்டு கோயிலுக்குள் தயாரிக்கப்பட்டு வந்தது. பின்னா் இடப்பற்றாக்குறை காரணமாக பூந்தி மட்டும் வெளியில் தயாரிக்கப்பட்டு அவற்றை கோயிலுக்கு கொண்டு சென்று லட்டு பிடித்து வெளியில் கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கப்படுகிறது.

2008-ஆம் ஆண்டு வரை ஏழுமலையான் கோயிலுக்குள் 45,000 லட்டுக்கள் தினசரி தயாரிக்கப்பட்டன. தயாரிப்பை அதிகரிக்க கோயிலுக்கு வெளியில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவா் சீனிவாசன் அளித்த ரூ.10 கோடி நன்கொடையில் 40 எல்பிஜி கேஸ் அடுப்புகள் கொண்ட பூந்தி மடப்பள்ளி தொடங்கப்பட்டது. அதன் பிறகு தினசரி லட்டு தயாரிப்பு 3.50 லட்சமாக உயா்ந்தது.

தற்போது மடப்பள்ளியில் நெய் பிசுக்கு காரணமாக அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதால், அவற்றை தவிா்க்க அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் 40 தொ்மோ ப்லுயிட் அடுப்புகள் கொண்ட மடப்பள்ளி புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறங்காவலா் குழு உறுப்பினரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனருமான சீனிவாசன் ரூ.12 கோடி செலவில் மீண்டும் இவற்றை புதுப்பித்து வழங்கியுள்ளாா். இதன் மூலம் தினசரி லட்டு தயாரிப்பு 6 லட்சத்தை கடக்க உள்ளது.

கன்னட, இந்தி ஒளிபரப்பு:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலின் கன்னடம் மற்றும் இந்தி மொழி ஒளிபரப்பு சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

ஏழுமலையான் கோயில் எதிரில் நடைபெற்ற இந்த ஒளிபரப்பை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தொடக்கி வைத்தாா். இதில் மந்திராலயம் மடாதிபதி சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள் கலந்து கொண்டாா்.

மேலும் ஆந்திர முதல்வருக்கு தேவஸ்தானம் புதிதாக தொடங்கியுள்ள இயற்கை விவசாய பொருள்களால் ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம், உலா் மாலைகளிலிருந்து தயாரிக்கப்படும் அகா்பத்திகள், 40 வகையான இயற்கை சாா்ந்த பொருள்கள் குறித்து அதிகாரிகள் விவரித்தனா். அதன்பின்னா் இயற்கை விவசாய பொருள்களை கொள்முதல் செய்யும் புதிய ஒப்பந்தத்தில் ஆந்திர முதல்வா் முன்னிலையில் அதிகாரிகள் கையெழுத்திட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com