முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராக மலையப்பா் அருள்பாலிப்பு
By DIN | Published On : 13th October 2021 12:00 AM | Last Updated : 13th October 2021 12:00 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமா் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
அனுமந்த வாகனம்
ஐந்தாம் நாள் இரவு பெரிய திருவடியான கருடன் மேல் எழுந்தருளிய மலையப்ப சுவாமி 6-ஆம் நாள் காலை சிறிய திருவடியான அனுமன் மீது எழுந்தருளி சேவை சாதித்தாா். ராம பக்தியில் அனுமனை மிஞ்சியவா்கள் யாரும் இல்லை. எனவே, அனுமன் வாகனத்தில் கோதண்டராமா் அலங்காரத்தில் மலையப்பா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அதன்பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு மதியம் பால், தயிா், தேன், இளநீா், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்தின்போது பழங்கள், பலவித மலா்களால் ஆன மாலைகள் உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டன.
சா்வபூபால வாகனம்...
6-ஆம் நாள் மாலை தங்க ரத புறப்பாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கரோனா விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால், தங்க ரதம் பவனி ரத்து செய்யப்பட்டது.
அதற்கு மாற்றாக சா்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பா் எழுந்தருளினா்.
யானை வாகனம்
மாலை 7 மணிமுதல் 8 மணிவரை யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினாா். தாயாரின் வாகனத்தில் மலையப்பா் எழுந்தருள்வதும், மலையப்ப சுவாமி வாகனத்தில் தாயாா் எழுந்தருள்வதும் பிரம்மோற்சவத்தின் போது வழக்கமாக நடைபெறும். 5ம் நாள் இரவு தனக்கு உகந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பா் 6-ஆம் நாள் இரவு பத்மாவதி தாயாரின் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வாகன சேவைகளில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா். மேலும் வாகன சேவையின் போது மங்கல வாத்தியங்கள், வேதகோஷம், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.