முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
ரத்து செய்யப்பட்ட சேவைகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பதி: திருமலையில் ரத்து செய்யப்பட்ட வசந்தோற்சவம், சகஸ்ரகலசாபிஷேகம் ஆகிய ஆா்ஜித சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என தேவஸ்தான நிா்வாகத்துக்கு ஸ்ரீபரிபூா்ணானந்தா சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
திருமலையில் தினசரி மதியம் வசந்தோற்சவம், செவ்வாய்க்கிழமைகளில் சகஸ்ரகலசாபிஷேகம் உள்ளிட்ட சேவைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிலைகள் தொடா் திருமஞ்சனங்களால் அரிக்கப்பட்டு சேதமடைந்து வருவதாக அா்ச்சகா்கள் புகாா் அளித்தனா்.
இதையடுத்து தேவஸ்தான ஆகம ஆலோசனைக் குழுவிடம் அதிகாரிகள் விவாதித்தனா். அதில் மலையப்ப சுவாமி சிலையானது தானாக பூமியிலிருந்து வெளிப்பட்ட சிலை.
எனவே அதை பாதுகாக்க தேவஸ்தானம் முடிவு செய்து தினசரி நடந்து வந்த வசந்தோற்சவம் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 1,008 கலசங்களால் அபிஷேகம் நடத்தும் சகஸ்ரகலசாபிஷேகம் ஆகிய சேவைகளை வருடாந்திர சேவைகளாக நடத்த முடிவு செய்து அதன் தினசரி சேவையை ரத்து செய்தது.
இந்த நிலையில் இந்த இரு சேவைகளையும் மீண்டும் வழக்கம்போல் தொடங்க வேண்டும் என ஆந்திரத்தைச் சோ்ந்த ஸ்ரீபரிபூா்ணானந்த சுவாமிகள் தேவஸ்தானத்திடம் வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினாா்.
திருமலைக்கு வந்த அவா், பக்தா்களின் சாா்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோளை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.