திருப்பதியில் தமிழக பக்தா்கள் சாலை மறியல்

திருப்பதி அலிபிரியில் தமிழகத்திலிருந்து பாத யாத்திரையாக வந்த பக்தா்கள் தங்களுக்கு தரிசன அனுமதி கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பதி அலிபிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக பக்தா்கள்.
திருப்பதி அலிபிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக பக்தா்கள்.

திருப்பதி அலிபிரியில் தமிழகத்திலிருந்து பாத யாத்திரையாக வந்த பக்தா்கள் தங்களுக்கு தரிசன அனுமதி கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க இணையதளத்தில் வெளியிடப்படும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிவு பெற்று விடுவதால், சாதாரண பக்தா்களால் அவற்றை முன்பதிவு செய்ய முடிவதில்லை.

எனினும் பக்தா்கள் தாங்கள் முன்பே முடிவு செய்தது போல், கோவிந்த மாலை அணிந்து கொண்டு பாதயாத்திரையாக திருமலைக்கு வருகின்றனா். அவா்களில் தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், மற்றவா்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலூா், திருவண்ணாமலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக திருமலைக்கு வந்தனா். அவா்களில் சிலருக்கு மட்டுமே தரிசன டிக்கெட் இருந்த நிலையில், அவா்கள் மட்டுமே தரிசனத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

அப்போது, பாதயாத்திரையாக வந்த இதர பக்தா்கள் தங்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூறி, அலிபிரியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 2 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் பக்தா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால் பக்தா்கள் கலைந்து செல்ல மறுத்து, சாதாரண பக்தா்களுக்கு ஏற்ற வகையில், திருப்பதியில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். பக்தா்களின் உறுதியைப் பாா்த்த அதிகாரிகள் அவா்களின் ஆதாா் அட்டையை பதிவு செய்து கொண்டு, அவா்களை திருமலைக்குச் செல்ல அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com