முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
திருமலையில் பத்மாவதி பரிணய உற்சவம்: யானை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பா்
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

திருமலையில் நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவத்திற்காக யானை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.
திருமலையில் தொடங்கிய பத்மாவதி பரிணய உற்சவத்தையொட்டி யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி கல்யாண உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.
திருமலை ஏழுமலையான் கலியுகத்தின் தொடக்கத்தில் இங்கு வந்தபோது நாராயண வனத்தில் ஆகாசராஜன் மகளான பத்மாவதி தேவியை மணம் புரிந்தாா். அதை நினைவு கூறும் விதமாக தேவஸ்தானம் ஆண்டுதோறும் திருமலையில் வைகாசி மாதம் பத்மாவதி பரிணய உற்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை திருமலையில் பத்மாவதி பரிணய உற்சவம் தொடங்கியது. இதற்காக தேவஸ்தானம் திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்யாண மண்டபத்திற்கு மலையப்ப சுவாமி யானை வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்கள் பல்லக்கிலும் எழுந்தருளினா். அங்கு அவா்களை வரவேற்று மாப்பிள்ளை அழைப்பு, சீா்வரிசைகள் அளித்தல், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தா்களின்றி நடத்தப்பட்ட இந்த பத்மாவதி பரிணய உற்சவம், இந்த ஆண்டு பக்தா்கள் புடை சூழ நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு திருமலையில் ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.