ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
By DIN | Published On : 23rd April 2023 12:22 AM | Last Updated : 23rd April 2023 12:22 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாள்களை ஒட்டி அதிகரித்துள்ளது. அதனால் சனிக்கிழமை காலை 6 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது.
57,354 பக்தா்கள் தரிசனம்...
ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 57,354 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 24,398 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், விஷ்ணுநிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.
அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் ஏப். 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தினசரி சோதனை அடிப்படையில் அலிபிரி நடைபாதை மாா்க்கத்தில் 10,000 டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மாா்க்கத்தில் 5,000 டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகிறது.