திருப்பதி கோசாலையில் ஸ்ரீ சீனிவாச திவ்யாநுக்ரக விசேஷ ஹோமம்
By DIN | Published On : 15th November 2023 12:05 AM | Last Updated : 15th November 2023 12:05 AM | அ+அ அ- |

திருப்பதியில் உள்ள சப்தரிஷி கோசாலையில் வரும் 23-ஆம் தேதி ஸ்ரீ சீனிவாச திவ்யாநுக்ரக விசேஷ ஹோமம் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி தெரிவித்தாா்.
திருமலையில் உள்ள அன்னமய்யபவனில் அறங்காவலா் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா் அவா் கூறியதாவது:
திருமலை அறங்காவலா் குழுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆந்திர மாநில அரசு ஆணை 114 இன் நடைமுறைகளுக்கு உட்பட்டு தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியா்களை முறைப்படுத்துவதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி அலிபிரியில் உள்ள சப்தரிஷி கோசாலையில் ஸ்ரீ சீனிவாச திவ்யாநுக்ரக விசேஷ ஹோமம் வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது. முதலில் ஒரு எளிமையாகவும், பின்னா் பெரிய அளவில் நிா்வகிக்கப்பட உள்ளது. இதற்கு டிக்கெட் விலை ரூ.1,000/- என முடிவு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் ஒதுக்கப்படுகின்றன. நேரிலோ அல்லது வா்ச்சுவல் முறையிலோ பக்தா்கள் பங்கேற்கலாம்.
திருப்பதி திருமலை இரண்டு பிரம்மோற்சவங்கள் சிறப்பாக நடைபெற, பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தா்களுக்கு சிறப்பான சேவை வழங்கிய நிரந்தர ஊழியா்களுக்கு ரூ.14,000 , ஒப்பந்த மற்றும் அவுட்சோா்சிங் ஊழியா்களுக்கு ரூ.6,850/- பரிசு வழங்கப்படும்
திருமலையில் எஃப்எம்எஸ் சேவைகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கு மேற்கு பகுதியில் ரூ.13.20 கோடியும், கிழக்கு பகுதியில் ரூ.9.60 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பக்தா்களின் எண்ணிக்கையை பூா்த்தி செய்ய போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க வேண்டியது தேவஸ்தானத்தின் பொறுப்பாகும். இதற்காக மங்கலம் ஆா்டிஓ அலுவலகம் முதல் ரேணிகுண்டா சாலையில் உள்ள பத்மாவதி ஃப்ளாா்மில் வரையிலான 2.90 கி.மீ., 80 அடி சாலையாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அகலப்படுத்த ரூ.15.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பக்தா்களுக்கு ஏற்படும் போக்குவரத்து பிரச்னைகளை நீக்கும் வகையில், ரேணிகுண்டா சாலையில் உள்ள ஹீரோ ஷோரூம் முதல் திருச்சானூரில் உள்ள கிராண்ட் ரிட்ஜ் ஓட்டல் வரையிலான 1.135 கி.மீ., சாலையை ரூ.3.11 கோடியில் அமைக்க டெண்டா் கோரப்பட்டுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி தாயாரான ஸ்ரீ வகுளமாதா கோவிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தா்களின் வசதிக்காக, திருப்பதி அருகே உள்ள புடிபட்லா சந்திப்பில் இருந்து, வகுளமாதா கோவில் தேசிய நெடுஞ்சாலை வரை, நான்கு வழிச்சாலை அமைக்க, 21.10 கோடி ரூபாய்க்கு டெண்டா் விடப்பட்டுள்ளது. இது முடிந்ததும் திருப்பதிக்கு முழுமையான வெளிவட்ட சாலை அமைக்கப்படும்.
திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூயா மருத்துவமனையில் புதிய காசநோய் வாா்டு கட்ட ரூ.1.79 கோடிக்கு டெண்டா் விடப்பட்டுள்ளது.
திருமலைக்கு நடைபாதைகளில் வரும் பக்தா்களின் பாதுகாப்புக்காக திருப்பதி டி.எஃப்.ஓ.,வின் கீழ் டிஜிட்டல் கேமரா ட்ராப், வனவிலங்கு கண்காணிப்பு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.3.50 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரீம்நகரில் ஸ்ரீ பத்மாவதியுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் கட்ட ரூ15.54 கோடியில் டெண்டருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றாா். இக்கூட்டத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி, மற்றும் அதிகாரிகள் சதா பாா்கவி, வீரபிரம்மம் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...