‘திருமலையில் 12,000 சதுரடியில் மரக் கன்றுகள் நடப்படும்’
திருமலையில் பசுமைத் தன்மையை அதிகரிக்க 12,000 மரக்கன்றுகள் நட அதிகாரிகள் முடிவு செய்யதுள்ளனா்.
திருமலை ஸ்ரீ பத்மாவதி ஓய்வு இல்ல வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேவஸ்தான வனத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற வன மகோற்சவ நிகழ்ச்சியில், கலந்து கொண்ட செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியுடன் இணைந்து திருமலையின் தல விருட்சமான மர சம்பங்கி கன்றை நட்டனா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா்கள் பேசியது: தேவஸ்தான வனத் துறையில் 2,000 மரக்கன்றுகளும், வனப் பகுதியில் 12,000 மரக்கன்றுகளும் நடப்படும். திருமலையில் ‘விதைக் கிண்ணம் திட்டம்’ மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிரந்தரமாக மரக்கன்றுகள் நடும் திட்டம் மேற்கொள்ளப்படும். தேவஸ்தான ஆயுா்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை இருப்பதால், இந்த நிறுவனங்களுக்குத் தேவையான மருத்துவ தாவரங்களை குறிப்பாக திருமலையில் தங்கும் விடுதிகளுக்கு அருகில் உருவாக்க உள்ளோம் என்றனா்.
இதற்கிடையில், தேவஸ்தான வனத் துறையின் உதவியுடன் திருமலையின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மனு சம்பங்கி (மக்னோலியா சம்பக்கா), சந்தனம் (சந்தலம் ஆல்பம்) மற்றும் சீதா அசோகா (சரகா அசோகா) மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், தேவஸ்தான துணை வனப் பாதுகாவலா் சீனிவாசலு, துணை அதிகாரிகள் பாஸ்கா், ஆஷாஜோதி, சுகாதார அலுவலா் மதுசூதன் பிரசாத் மற்றும் வனத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.