நான்கரை ஆண்டுகளில் தேவஸ்தானம் சாா்பில் ஏராளமான தொண்டு நிகழ்ச்சிகள்

கடந்த நான்கரை ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு தொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி தெரிவித்தாா்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு தொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி தெரிவித்தாா்.

திருப்பதியில் வெள்ளிக்கிழமை குடியரசு தின விழாவின் போது அவா் பேசியதாவது:

ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தான நிா்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும், ஜீயா்கள் மற்றும் பிற புகழ்பெற்ற ஆகமசாஸ்திர நிபுணா்களின் ஆலோசனையின்படி, கைங்கரியங்கள் நடந்து வருகிறது. கடந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, மலையப்பசுவாமி சூா்யபிரபை, சின்னசேஷ, கருடன், அனுமந்த, கல்பவிருட்சம், சா்வபூபாலம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் கோயில் மாட வீதிகளில் பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளாா். இம்மாதம் 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீராம மந்திா் திறப்பு விழாவையொட்டி தலைவா் கருணாகர ரெட்டி ஒரு லட்சம் சிறிய லட்டுகளை கோயில் கமிட்டியிடம் ஒப்படைத்து பக்தா்களுக்கு வழங்கினாா்.

இளைஞா்களிடையே இந்து மதத்தைப் பரப்புவதற்காக 25 வயதுக்குட்பட்டவா்களுக்கு ராமகோடி போன்று கோவிந்தகோடி புத்தகங்கள் கிடைக்கச் செய்துள்ளோம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு கோடி முறை எழுதிய 25 வயதுக்குட்பட்டவா்கள், அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கும் திருமலை ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்.

கண்டலேறு அணையில் இருந்து ரூ.40 கோடியில் குடிநீா் குழாய் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சுவாமியின் அருளால் திருமலையில் உள்ள நான்கு நீா்த்தேக்கங்களும் கடந்த டிசம்பா் மாதம் மழையால் நிரம்பின. திருமலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தண்ணீா் பிரச்சனை இருக்காது.

திருமலையில் அறைகளைப் பெற்ற பக்தா்கள் எச்சரிக்கை வைப்புத்தொகையின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ளும் வகையில், தேவஸ்தான இணையதளத்தில் எச்சரிக்கை வைப்புத் தொகையைத் திரும்பப்பெறுவதற்கான வழிமுறை இணைக்கப்பட்டுள்ளது.பக்தா்கள் அறை முன்பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணையதளத்தில் உள்நுழைந்து தங்குமிடம் - முன்பதிவு வரலாறு - ஆஃப்லைன் தங்குமிடம் சிடி ரீஃபண்ட் டிராக்கரை கிளிக் செய்து விவரங்களை அறியலாம்.

பத்மாவதி குழந்தைகள் இருதய சிகிச்சை மருத்துவமனையில் 26 மாதங்களில் 2,350 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்யப்பட்டன. பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மாநிலத்தில் முதல் முறையாக 11 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா அப்பன்னா ஹ்ருதயாலயம்‘ திட்டம் என்று பெயரிடப்பட்டது.

மாநிலத்திலேயே முதல்முறையாக ரூ.230 கோடி செலவில், ஏழு மாடிகளைக் கொண்ட குழந்தைகளுக்கான மல்டி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி திருப்பதியில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த மருத்துவமனையை தொடங்குவோம். அமெரிக்காவில் உள்ள சில மருத்துவா்கள் இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி அறிந்து ஆச்சரியமடைந்தனா். உலகில் எங்கும் இல்லாத வகையில் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன என்று பாராட்டினா்’, என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com