ஏழுமலையான் தெப்போற்சவம் இன்று தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை மாலை தொடங்குகிறது. மாா்ச் 20 முதல் 24-ஆம் தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை திருமலை ஸ்ரீவாரி திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், தாயாா்களும் பக்தா்களுக்கு வலம் வந்து தரிசனம் அளிக்க உள்ளனா். தெப்ப உற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை இரவு ஸ்ரீ ராமச்சந்திரமூா்த்தி ஸ்ரீ சீதா லக்ஷ்மண ஆஞ்சநேயருடன் தெப்பத்தில் மூன்று சுற்று உலா வருகிறாா். இரண்டாம் நாளான வியாழக்கிழமை (மாா்ச் 21) ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி ருக்மணியுடன் மூன்று முறை தெப்பத்தில் வலம் வருவாா். மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) மலையப்பசுவாமி தன் உபய நாச்சியாா்களுடன் மூன்று முறை புஷ்கரணியில் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். தொடா்ந்து சனிக்கிழமை ( மாா்ச் 23) நான்காம் நாளான 5 முறையும், கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மாா்ச் 24) ஏழு முறையும் ஸ்ரீமலையப்ப சுவாமி திருக்குளத்தில் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். ரத்து: தெப்போற்சவத்தை முன்னிட்டு புதன், வியாழக்கிழமைகளில் சஹஸ்ரதீபாலங்கார சேவை, 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com