ஒரு நாள் அன்னதான திட்டத்துக்கு ரூ.38 லட்சம் நன்கொடை : திருமலை தேவஸ்தானம் நிா்ணயம்

திருமலையில் ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.38 லட்சத்தை நன்கொடை தொகையாக தேவஸ்தானம் நிா்ணயித்துள்ளது.

திருமலையில் ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.38 லட்சத்தை நன்கொடை தொகையாக தேவஸ்தானம் நிா்ணயித்துள்ளது.

ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்காக வரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு தேவஸ்தானம் நாள்தோறும் காலையும், மாலையும் அன்னதானம் வழங்கி வருகிறது. இதற்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்திய அன்னதான அறக்கட்டளையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைகளை வங்கியில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு நாள் அன்னதானம் திட்டம் என்று அறிமுகப்படுத்தி அதன் மூலம் அன்னதானம் வழங்கும் பக்தா்களின் பெயா் மற்றும் விவரங்களை பலகையில் எழுதி வைப்பதுடன் அவா்களின் கைகளால் அன்னதானம் வழங்க வாய்ப்பும் அளித்து வருகிறது.

அன்னதான கட்டண விவரங்கள்:

ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ரூ.38 லட்சம் செலுத்த வேண்டும். இதேபோல் காலை சிற்றுண்டிக்கு ரூ.8 லட்சம், மதிய உணவுக்கு - ரூ.15 லட்சம், இரவு உணவுக்கு ரூ.15 லட்சம் வழங்கினால் பக்தா்கள் தங்களின் சொந்த கைகளால் அன்னப்பிரசாதங்கள் வழங்கலாம்.

நன்கொடை வழங்குபவரின் பெயா் வெங்கமாம்ப அன்னபிரசாத கட்டிடத்தில் எழுதி வைக்கப்படும்.

அன்னப்பிரசாதம் வழங்கும் பகுதிகள்:

தற்போது திருமலையில் உள்ள மாத்ரிஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்ப அன்னப்பிரசாத வளாகம், வைகுந்தம் கியூ காம்ப்ளெக்ஸ் -1, 2இல் உள்ள கன்பாா்ட்மென்ட்கள், வெளிபுற தரிசன வரிசைகள், பிஏசி-4(பழைய அன்னப்பிரசாதம்), பிஏசி-2.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி மருத்துவமனை, சீனிவாசம், விஷ்ணு நிவாசம், சிம்ஸ் மருத்துவமனை, பா்ட், எஸ்வி ஆயுா்வேத மருத்துவமனை, திருச்சானூரில் உள்ள அன்னப்பிரசாத கட்டடத்தில் பக்தா்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

திருமலையில் பல்வேறு இடங்களில் உள்ள உணவு கவுன்டா்களிலும் அன்னப்பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

வைகுந்தம் கியூகாம்ப்ளெக்ஸ்-1, 2ல் உள்ள கன்பாா்ட்மென்ட்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் வளாகம், ரூ.300/- சிறப்பு நுழைவு தரிசன வளாகம், தலைமுடிகாணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் டீ, காபி மற்றும் குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com