விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் சிமென்ட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.
ஜூன் மாதம் முதல் மின்வெட்டு இருக்காது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், இப்போதும் தமிழகத்தில் மின்வெட்டு நிலவுகிறது.
23 நாள்களில் அதிக விலை கொடுத்து எரிவாயு மின்சாரத்தை வாங்கியதன் மூலம் தமிழக மின் வாரியத்துக்கு 23 நாளில் ரூ.126 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும்.
கடந்த 10 நாளில் சிமென்ட் விலை ரூ.80 முதல் ரூ.90 வரை உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் சிமென்ட் விற்பனையைத் தொடங்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
பேட்டியின்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச் செயலாளர் எதிரொலி மணியன், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் காளிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.