சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி ஊராட்சியில் உள்ள தரணி சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி ஊராட்சியில் உள்ள தரணி சர்க்கரை ஆலைக்கு போளூர், சேத்துப்பட்டு, ஜவ்வாதுமலை, கலசப்பாக்கம், கணியம்பாடி, ஆரணி எனப் பல்வேறு ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் தரணி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பினர்.
இந்த கரும்புக்கு ஒவ்வொரு விவசாயிகளுக்கும் டன்னுக்கு ரூ.300 வீதம் பிடித்தம் செய்து மீதி பணத்தைப் பட்டுவாடா செய்தனர். இந்த பாக்கித் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டன் ஒன்றுக்கு ரூ.300 பாக்கியை வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
மேலும் தமிழக அரசு அறிவித்த டன்னுக்கு ரூ.2,550 வழங்க வேண்டும், தமிழக அரசு முத்தரப்பு கூட்டம் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில உதவி செயலாளர் தயாநிதி, செயலாளர் பாலமுருகன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மாவட்டப் பொருளாளர் சிவாஜி உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தண்டராம்பட்டில்...
தண்டராம்பட்டை அடுத்த கொழுந்தம்பட்டு பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் எஸ்.பலராமன் வகித்தார்.
அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.டில்லிபாபு, மாநில துணைத் தலைவர் எ.ஜனார்த்தனன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கரும்பு டன்னுக்கு அரசு அறிவித்த விலை ரூ.2,650 தர மறுக்கும் சர்க்கரை ஆலை சென்னை சுகர்ஸ் நிர்வாகம் 1 டன் கரும்புக்கு ரூ.300 வீதம் பாக்கித்தொகை முழுவதும் விவசாயிகளுக்கு வழங்குதல், வறட்சியால் காய்ந்து போன கரும்புகளை உடனடியாக அறுவடை செய்திடுதல், வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கிடுதல், கரும்பு விவசாயிகளுக்கு தனிநபர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்தல், கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றிடுதல், கரும்பு, சர்க்கரை, மொலாசஸ் அனைத்து பொருள்களையும் ஒரே எடை மேடையில் எடைபோட்டு ஆலை நிர்வாகம் மோசடி செய்திடுவதாக ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்திடுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.