திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் வரலாற்றுத் துறை சார்பில் நடைபெறும் 3 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
இக் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றுத் துறை சார்பில் வரலாற்றுயர்வு நோக்கில் ஆன்மிகத் தலங்கள் மற்றும் மரபுசார் சமயப் பண்பாட்டு களங்கள் என்ற தலைப்பில் 3 நாள் பன்னாட்டு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி, கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை இக் கருத்தரங்கின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஏ.சுப்பிரமணியன் வரவேற்றார். கனடா நாட்டில் உள்ள மணிடோபா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவி வைத்தீஸ் மாநாட்டை விளக்கிப் பேசினார்.
சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் தாண்டவன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார்.
தொடர்ந்து, கருத்தரங்க மலரை தாண்டவன் வெளியிட, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் குணசேகரன் பெற்றுக் கொண்டார் .
அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தனிஸ்லாஸ், பேராசிரியர் முத்துமோகன், ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜான்ஸ் கிரீம்ஸ், சென்னை பச்சையப்பா கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர்கள் ரங்கசாமி, கந்தசாமி, அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் தியாகராஜன், திருவள்ளுவர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் முனவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக் கருத்தரங்கு தொடர்ந்து சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் பலர் கலந்து கொள்கின்றனர்.