திருவண்ணாமலை அருகே நூறு நாள் வேலை வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுப்பதாக, மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினரை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், கீக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். பிற்பகல் 2 மணிக்கு அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அ.ஞானசேகரன் கீழே இறங்கி வந்து காரில் ஏறி வீட்டுக்குச் செல்ல முயன்றார். இதேநேரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் ஆர்.வனரோஜாவும் கீழே இறங்கி வந்தார். அப்போது ஆட்சியர் அ.ஞானசேகரன், மக்களவை உறுப்பினர் ஆர்.வனரோஜா ஆகியோரை முற்றுகையிட்ட பொதுமக்கள் கீக்களூர் ஊராட்சியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊராட்சியில் உள்ள ஏரியை தூர்வாரும் பணி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இப் பணியில் ஈடுபட எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் வாய்ப்பு அளிக்க மறுக்கிறது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர், ஊராட்சிச் செயலரைக் கேட்டால் வீட்டுக்கு வீடு கழிவறை கட்டினால்தான் நூறு நாள் வேலை வழங்கப்படும். கழிவறை கட்டாவிட்டால் வேலை வழங்கப்படாது என்று கூறுகின்றனர். இதேபோல கடந்த 3 வாரங்களாக எங்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகின்றனர் என்று முறையிட்டனர்.
இதையடுத்து, நீங்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கழிவறை கட்டச் சொல்கின்றனர். இருப்பினும் கழிவறை கட்டாததால் நூறு நாள் வேலை வழங்க மறுப்பது தவறுதான். உங்கள் அனைவருக்கும் வேலை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குகிறோம் என்று ஆட்சியரும், மக்களவை உறுப்பினர் ஆர்.வனரோஜவும் உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.