திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தையொட்டி மதுவால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மினி மாரத்தான் போட்டிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து மினி மாரத்தான் ஓட்டம் தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் வீ.மதியழகன் மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், வாலிபர் சங்க மாநில ரத்த தான கழக நிர்வாகி எம்.செந்தில், வாலிபர் சங்க நிர்வாகிகள் எஸ்.ராமதாஸ், எம்.கார்த்தி, ஆர்.கமலக்கண்ணன், ஏ.சரவணன், எம்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மினி மாரத்தான் ஓட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகள், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் பகுதியில் மாரத்தான் ஓட்டம் நிறைவு பெற்றது. ஓட்டத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.