இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 26 பேர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 88 பேர் என மொத்தம் 114 பேருக்கு, திங்கள்கிழமை வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
Published on

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 26 பேர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 88 பேர் என மொத்தம் 114 பேருக்கு, திங்கள்கிழமை வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 1 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 1 நகராட்சி கவுன்சிலர், 2 பேரூராட்சிகளின் கவுன்சிலர், 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 13 ஊராட்சித் தலைவர்கள், 95 ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் இடங்கள் என மொத்தம் 115 பதவிகளுக்கான இடைத் தேர்தலை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் ஏராளமானோர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதால், 88 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் அணையம் உத்தரவிட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: மீதமுள்ள 26 இடங்களுக்கு 66 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு 11 இடங்களில் தொடங்கியது.

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, போளூர், அனக்காவூர், வெம்பாக்கம், பெரணமல்லூர், வந்தவாசி, தெள்ளாறு, ஆரணி, மேற்கு ஆரணி ஆகிய 11 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

26 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: வந்தவாசி ஒன்றியம், 31-வது வார்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 27, 112 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதில், அதிமுக வேட்பாளர் ஆர்.அர்ச்சுணன் 21,945 வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றார். விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் எஸ்.அன்பரசு 907 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ப.முத்துசாமி 3,647 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் எம்.ரசூல் 266 வாக்குகளும் எடுத்தனர். பல்வேறு காரணங்களுக்காக 347 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

வெற்றி பெற்ற 9 ஊராட்சித் தலைவர்கள்:போளூர் ஒன்றியம் கட்டிப்பூண்டி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கே.சி.முனுசாமி 831 வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றார். இதேபோல, சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி ஊராட்சித் தலைவருக்குப் போட்டியிட்ட ஜி.இந்திரா 831 வாக்குகள் எடுத்தும், தண்டராம்பட்டு ஒன்றியம் ராயண்டபுரம் ஊராட்சித் தலைவருக்குப் போட்டியிட்ட கே.மொட்டையன் 1,259 வாக்குகள் எடுத்தும், அனக்காவூர் ஒன்றியம் அத்தி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இ.முருகசாமி 430 வாக்குகள் எடுத்தும் வெற்றி பெற்றனர்.

மேலும், வந்தவாசி ஒன்றியம் எரமலூர் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டி.மீராதேவி 643 வாக்குகள் எடுத்தும், வெம்பாக்கம் ஒன்றியம் திருப்பனங்காடு ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜி.உமையாள் 643 வாக்குகள் எடுத்தும், பெரணமல்லூர் ஒன்றியம், நல்லடிசேனை ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.சரவணன் 288 வாக்குகள் எடுத்தும், ஆரணி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஏ.ஆர்.மணி 1,349 வாக்குகளும், சேவூர் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கே.பெருமாள் 3,066 வாக்குகள் எடுத்தும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற 16 வார்டு உறுப்பினர்கள்: திருவண்ணாமலை ஒன்றியம் சு.கம்புப்பட்டு ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக என்.துரைக்கண்ணு (67 வாக்குகள்), வெறையூர் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக எம்.சுகுணா (85 வாக்குகள்), போளூர் ஒன்றியம் குப்பம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினராக ஜி.பன்னீர்செல்வம் (176 வாக்குகள்), வெம்பாக்கம் ஒன்றியம் சோழவரம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக ஏ.டில்லிபாபு (97 வாக்குகள்), வந்தவாசி ஒன்றியம் காரம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக ஏ.பிலாலுதீன் (62 வாக்குகள்), மங்கலநல்லூர் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக எம்.சிவக்குமார் (56 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதேபோல, தெள்ளாறு ஒன்றியம் வெடால் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக பி.நெடுஞ்செழியன் (93 வாக்குகள்), வல்லம் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக வி.வினோகாந்தி (97 வாக்குகள்), மோசவாடி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக வி.யசோதா (31 வாக்குகள்), பெரணமல்லூர் ஒன்றியம் இசாகொளத்தூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக பா.முகுந்தன் (36 வாக்குகள்), அன்மருதை ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக எம்.பவுனம்மாள் (90 வாக்குகள்), மேல்வில்லிவலம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக எஸ்.மனோகரன் (40 வாக்குகள்), ஆரணி ஒன்றியம் எஸ்.வி.நகரம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக ஏ.கேசவன் (192 வாக்குகள்), ராட்டிணமங்கலம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக பி.ரமேஷ் (159 வாக்குகள்), மேற்கு ஆரணி ஒன்றியம், மருசூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக ஆர்.குப்பன் (154 வாக்குகள்), புதுப்பாளையம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக மு.கிருஷ்ணன் (125 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 26 பேர், போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட 88 பேர் என மொத்தம் 114 பேருக்கான வெற்றிச் சான்றிதழ்களை அந்தந்த ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திங்கள்கிழமை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com