வந்தவாசி அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 5 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சேட்டு (36). இவர், இவரது தாய் வள்ளி (55), அதே கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் (29) ஆகியோர் ஆட்டோவில் வந்தவாசியை அடுத்த தேசூருக்கு திங்கள்கிழமை சென்று உரம் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆட்டோவை அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (35) ஓட்டியுள்ளார். தேசூரை அடுத்த ஜெங்கம்பூண்டி அருகே சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து, ஆட்டோ மீது மோதியது. இதில் காயம் அடைந்த சேட்டு, வள்ளி, பீட்டர், செந்தில் ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில் தேசூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மற்றொரு விபத்து: காஞ்சிபுரத்தை அடுத்த கலக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரணி (22). இவர் அரசுப் பேருந்தில் வந்தவாசி வழியாக திண்டிவனத்துக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி-திண்டிவனம் சாலை, நடுக்குப்பம் கூட்டுச் சாலை வளைவில் செல்லும்போது எதிரே வந்த தனியார் பேருந்து, அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் காயமடைந்த பரணி வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பரணி அளித்த புகாரின்பேரில் தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.