பிளஸ் 2 முடித்த 2 அடி உயர இளைஞர், தனக்கு உதவித்தொகை வழங்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தார்.
வந்தவாசி தாலுகா, கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன் மகன் பிரகாஷ் (18). 2 அடி உயரமே உள்ள இவர் 10 ஆம் வகுப்பில் 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, வரலாறு பாடப் பிரிவை தேர்வு செய்து பிளஸ் 1, பிளஸ் 2 படித்தார்.
பிளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றாராம். மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையாம். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு தனது தந்தை எல்லப்பனுடன் பிரகாஷ் வந்தார்.
பின்னர், ஆட்சியர் அ.ஞானசேகரனைச் சந்தித்து தனக்கு உதவித் தொகை வழங்குமாறு மனு கொடுத்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், எனது நண்பர்கள் என் வீட்டுக்கே வந்து சைக்கிளில் என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவர். இவ்வாறு பள்ளிக்குச் சென்று வந்தேன். இப்போது வறுமை காரணமாக உதவித் தொகை கேட்டு மனு கொடுக்க வந்துள்ளேன் என்றார்.