பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஆரணி கிளையினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய ஓய்வூதிய சட்டம்-2013ஐ ரத்து செய்ய வேண்டும், தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதல்வர் அறிவித்தவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும், மாதம்தோறும் மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் எல்.திருவேங்டம் தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் ஏ.விருஷபதாஸ் வரவேற்றார். மாவட்டச் செயலர் இ.தங்கமணி, மாநில பொதுச் செயலர் என்.சேகர், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் பி.கண்ணன், அரசு ஊழியர் சங்கத் தலைவர் எம்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போளூரில்..
போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நிர்வாகி நாராயணமூர்த்தி தலைமை வகித்தார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பஞ்சமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட துணைத் தலைவர் சோனாசலம், மாவட்டச் செயலர் நீதிமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.