கலசப்பாக்கம், செப். 23: ஜவ்வாது மலை கோவிலூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் 500 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
கலசப்பாக்கம் வட்டத்துக்குள்பட்ட கோவிலூர் ஊராட்சியில் கடந்த மாதம் 26.8.2014 அன்று சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் போளூர், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய மூன்று வட்டத்துக்குள்பட்ட ஜமுனாமரத்தூர் மலைக் கிராமங்களிலிருந்து 1500 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய ஆவணங்களுடன் கொடுத்த சுமார் 500 பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் ஆர்.வனரோஜா, போளூர் சட்டப்பேரவை உறுப்பினர் எல்.ஜெயசுதா மற்றும் மாவட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள் என கலசப்பாக்கம் வட்டாட்சியர் டி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.