செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்யப்பட்டு அக்கல்லூரி மாணவர்கள் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட எல்ஐசி அலுவலகம் மூலம் வருடத்துக்கு ஒரு முறை எல்ஐசியின் வருமானப் பங்குத் தொகையில் இருந்து 5 சதவீதம் சமூக நலத்துக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது.
அதில் மாணவர்கள் முன்னேற்றம், பொது மக்கள் பயன்பாடு, பள்ளிகளுக்கு குடிநீர் வசதி போன்றவைகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியை மாவட்டத்தில் சிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்யப்பட்டு அந்த கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தார். எல்ஐசி அலுலலக மேலாளர்கள் (திருவண்ணாமலை) ராகவேந்திரராவ், (செங்கம்) ஸ்ரீதர், தலைவர் மன்ற முகவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பரிமளா ஜெயந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எல்ஐசி அலுவலக முதன்மை மேலாளர் வெங்கட்ராவ் கலந்துகொண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு மற்றும் சான்றுகள் வழங்கிப் பேசினார்.
அவர் பேசியதாவது: இந்த கல்லூரி கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்துக்காக துவங்கப்பட்டு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். இந்த கல்லூரி மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து அனைத்துத் துறைகளிலும் பணியாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.