செய்யாறு, செப். 23: செய்யாறில், ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு கிளை இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் செய்யாறு கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட்கிராஸ் இணைந்து நடத்தும் பயிற்சி முகாம் தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா தலைமை தாங்க, சார் ஆட்சியர் எம்.ஆர்த்தி முன்னிலை வகிக்கிறார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் ஜே.ஆர்.சி. கொடியினை ஏற்றி வைத்து ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைக்கிறார்.
வியாழக்கிழமை காலை மாநில அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர்கள் பங்கு பெறும் பேரணியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சனிக்கிழமை நடைபெறும் கருத்தரங்குக்கு தமிழ்நாடு கிளை ரெட்கிராஸ் மாநில பொருளாளர் எம்.செந்தில்நாதன் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் முகாம் நிறைவுரையில் கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முக்கூர் என்.சுப்பிரமணியன், வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மக்களவை உறுப்பினர்கள் ஆரணி வே.ஏழுமலை, திருவண்ணாமலை ஆர்.வனரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர் வே.குணசீலன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.