திருவண்ணாமலை, செப். 23: பிரச்னைகளைப் பேசித் தீர்க்கவே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர் கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு தலைமை வகித்தார்.
திமுக தணிக்கைக் குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், ஒன்றியச் செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மேலும் பேசியதாவது: உங்களின் அறிவுரைகள், உத்தரவுகள், ஆலோசனைகளைக் கேட்டு, உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
எனவேதான், இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறேன். இதுவரை 12 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளேன்.
"தேர்தலின்போது சமூக வலைதளங்களை நாம் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வோர் ஒன்றிய அளவிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும். உண்மையான உழைப்புக்குரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும்' என்று முன்னதாக நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். இவற்றை நான் வரவேற்கிறேன்.
கடந்த 3 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதி மீது 12 அவதூறு வழக்குகள், என் மீது 4 வழக்குகள், முரசொலி செல்வம் மீது 15 வழக்குகள், திண்டுக்கல் லியோனி மீது ஒரு வழக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 22, அவரது மனைவி பிரேமலதா மீது 3, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மீது 3, மதிமுக நிர்வாகிகள் மீது 12, மருத்துவர் ராமதாஸ் மீது 4, பாமக நிர்வாகி குரு மீது 5, பல்வேறு பத்திரிகைகள் மீது 25-க்கும் மேற்பட்ட பொய்யான அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. 2016-இல் தமிழகத்தில் நமது ஆட்சி மலர நீங்கள் தயாராக வேண்டும் என்றார்.
முன்னதாக, மாவட்ட திமுக செயலாளர் எ.வ.வேலு பேசுகையில், 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறிப்போம் என்றார்.
இக் கூட்டத்தில், அருணை பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் எ.வ.வே.கம்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் கே.வி.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்டாலினுக்கு வெள்ளி வாழை பரிசு: கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக செயலாளர் எ.வ.வேலு வெள்ளி வாளையும், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் வெள்ளி வாழை மரங்களையும் நினைவுப் பரிசுகளாக வழங்கினர். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியும் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.