Enable Javscript for better performance
இது பிரச்னை- என்ன தீர்வு ? ஆம்பூர் பெத்லகேமில் ரயில்வே மேம்பாலம்பொது மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை எப்பொழுது நிறைவேறும்?- Dinamani

சுடச்சுட

  

  இது பிரச்னை- என்ன தீர்வு ? ஆம்பூர் பெத்லகேமில் ரயில்வே மேம்பாலம்பொது மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை எப்பொழுது நிறைவேறும்?

  By dn  |   Published on : 27th March 2014 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆம்பூரில் பெத்லகேம் பகுதிக்கு செல்ல ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற 25 ஆண்டு கால கோரிக்கை எப்பொழுது நிறைவேறும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  ஆம்பூர் நகரையும், இதன் ஒதுக்குப்புற பகுதியான பெத்லகேமையும்  ரயில்வே இருப்புப் பாதை இரண்டாகப் பிரிக்கிறது. ஆம்பூர் நகராட்சியின் 28 முதல் 31 வார்டுகள் வரை இப்பகுதியில் உள்ளன.  இங்கு சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெத்லகேம் பகுதிக்கு அப்பால் மாதனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி, பனங்காட்டேரி ஆகிய மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன.   

    இங்கு மின்வாரிய அலுவலகம், துணை மின் நிலையம், 2 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையம், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, நகராட்சி நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.

    இப்பகுதிக்கு செல்ல பஸ் நிலையம் அருகேயுள்ள குறுகலான ரயில்வே குகை வழிப்பாதையைப் பயன்படுத்துகின்றனர். இதில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லமுடியும்.  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல புறவழிச் சாலை அருகேயுள்ள உயரமான ரயில்வே குகை வழிப்பாதைப் பயன்படுத்தப்படுகிறது. இரு பாதைகளும் தரை மட்டத்திலிருந்து மிகவும் தாழ்வாக இருப்பதால் கால்வாய் கழிவுநீர் எப்பொழுதும் தேங்கியே நிற்கும். குறிப்பாக மழைக் காலங்களில் சுமார் 5 அடி உயரம் மழைநீர் தேங்கும்.

   இதனால் பெத்லகேம் பகுதிக்கு செல்ல முடியாமலும், நகருக்குள் வர முடியாமலும் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.  கால்வாய் கழிவுநீர் எப்பொழுதும் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் இந்த வழியைப் பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்தில் சிக்கி சிலர் இறந்ததும் உண்டு. இரு குகைவழிப் பாதையிலும் மின் விளக்குகள் இல்லை.  இரவு நேரத்தில் பெண்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். 

    ரயில்வே துறையினர் பலமுறை ஆய்வு செய்தும் இதுவரை மேம்பாலம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம்பூர் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.  இதையடுத்து ரூ.30 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  ஆனால் அதற்கான பூர்வாங்கப் பணிகள் இதுவரை தொடங்கவில்லை.

   25 ஆண்டுகால கோரிக்கை எப்பொழுது நிறைவேறுமென பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

   

   

  கோரிக்கை...

  இதுகுறித்து பெத்லகேம் பகுதியில் வசிக்கும் பேராசிரியர் எம். அக்பர் கூறியது: பெத்லகேமில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமென முதல்வர் அறிவித்தது அறிவிப்போடு உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். 

   தொழிற்சங்கத் தலைவர் நேய. சுந்தர் கூறியது:  குகைவழிப் பாதை மிகவும் குறுகியதாக இருப்பதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலாகவே இருக்கிறது. ரயில்வே மேம்பாலத்தை விரைவில் அமைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

    மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்கச் செயலர் ஆர். ஆறுமுகம் கூறியது:  மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கனரக வாகனங்களும் பெத்லகேம் பகுதிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது. அதனால் விரைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

   

  வாக்குறுதி...

  இதுகுறித்து வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பா. செங்குட்டுவன் கூறியது: தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ரயில்வே மேம்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்வேன்.

   தற்போதைய எம்பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் கூறியது: மேம்பாலத் திட்டம் ரயில்வே துறையின் பரிசீலனையில் உள்ளது. பொதுவாகவே ரயில்வே துறையின் நடவடிக்கைகள் பல கட்டங்களில் மேற்கொள்ளப்படுவதால் சற்று காலதாமதமாகிறது.

  தேர்தலில் வெற்றி பெற்றால் இங்கு மேம்பாலம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai