Enable Javscript for better performance
மூதாட்டியிடம் 10 சவரன் நகைகள் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் முதியோர் உதவித் தொகை வாங்கித் தருவதாகக் கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து 10 சவரன் நகைகள், செல்போனை வாங்கிக் கொண்டு தலைமறைவான மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரசு (65). இவர், திங்கள்கிழமை (மார்ச் 24) திருவண்ணாமலையை அடுத்த பனை ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு செல்ல திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வந்திறங்கினார்.

    பின்னர், திருவண்ணாமலையில் இருந்து பனை ஓலைப்பாடி கிராமத்துக்குச் செல்லும் அரசு நகரப் பேருந்துக்காக அவர் காத்திருந்தார்.

    அப்போது, அவரிடம் பேச்சுக் கொடுத்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண், நானும் பனை ஓலைப்பாடி கிராமத்துக்குத்தான் செல்கிறேன். பேருந்து வர தாமதமாகும். ஆட்டோவில் போகலாம் வாருங்கள் என்று சொல்லி சரசுவை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    ஆட்டோ புறப்பட்ட சிறிது நேரத்தில் நீங்கள் முதியோர் உதவித் தொகை வாங்குகிறீர்களா என்று மர்ம நபர் கேட்டாராம். இதற்கு இல்லை என்று சரசு சொல்லியுள்ளார்.

    உடனே, வட்டாட்சியர் அலுவலகத்தில் எனக்குத் தெரிந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். நான் உதவித்தொகை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சரசுவை அழைத்துச் சென்றாராம்.

    அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றபோது, கழுத்தில் உள்ள நகைகளைப் பார்த்தால் உதவித்தொகை தரமாட்டார்கள்.

    எல்லா நகைகளையும் என்னிடம் கழற்றி கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி அவர் அணிந்திருந்த கம்மல், மோதிரம், செயின் உள்ளிட்ட 10 சவரன் நகைகள், செல்போனை வாங்கிக் கொண்டாராம்.

    பின்னர், எதிரே உள்ள கடைக்குச் சென்று பென்ஷன் விண்ணப்பங்கள் வாங்கி வாருங்கள் என்று சரசுவை மர்ம நபர் அனுப்பினாராம். அதன்படியே, விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தபோது நகைகளுடன் காணாமல் போனதை அறிந்து சரசு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சரசு புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai