Enable Javscript for better performance
கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    துர்முகி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் வியாழக்கிழமை சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

    ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில்: உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை துர்முகி தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றன.

    பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி: காலை 10 மணிக்கு சம்பந்த விநாயகர் சன்னதியில் புது ஆண்டுக்கான பஞ்சாங்கம் வைத்து படைக்கப்பட்டது. கோயில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, பின்னர் பஞ்சாங்கத்தைப் படித்தனர். இதையடுத்து, கோயில் கண்காணிப்பாளர் நரசிம்மன், மேற்பார்வையாளர் பழனிராஜா, மணியம் தியாகராஜன், கோயில் ஊழியர் செந்தில் மற்றும் பொதுமக்களிடம் புது ஆண்டுக்கான பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 8 மணி வரை கோயிலில் பல்வேறு சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

    கலசப்பாக்கம்: கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திரக்கோயிலில் வியாழன்கிழமை அதிகாலையில் வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. காலை 11 மணியளவில் பூவம்பட்டு கிராமத்திலிருந்து 158 பெண்கள் பால்குடங்களை எடுத்து வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    இதேபோல், பருவதமலை மல்லிகாரஜுனேஸ்வரர் கோயில், கலசப்பாக்கம் வேணுகோபால் சுவாமி கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    தண்டராம்பட்டு: வாணாபுரத்தை அடுத்த வரகூரிலுள்ள ஏரிக்கரை ஸ்ரீ பிடாரி காளியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜையும், நாட்டு நலன் கருதி சிறப்பு பூஜையும், பாலபிஷேகமும், அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    ஆரணி: ஆரணி நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள வீரஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, லட்சதீப விழா நடைபெற்றது. மேலும், சிறப்பு அபிஷேக - ஆராதனை நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரங்காரத்தில் வீரஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதேபோல, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதிகள், துர்க்கையம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், பூதநாராயணப் பெருமாள் கோயில், வேங்கிக்கால் விநாயகர் கோயில், ஓம்சக்தி கோயில், படவேடு ரேணுகாம்பாள் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai