Enable Javscript for better performance
வந்தவாசி, செய்யாறு தொகுதிகளில் மத்திய தேர்தல் பார்வையாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி, செய்யாறு தொகுதிகளில் மத்திய தேர்தல் பார்வையாளர் ஆய்வு

    By வந்தவாசி  |   Published on : 15th April 2016 07:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி, செய்யாறு தொகுதிகளில் மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் நீத்தா பிரசாத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    செய்யாறு தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 83 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்தத் தொகுதியில் மிக குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள கிராமங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரபுசங்கர், மேற்பார்வையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி, செய்யாறு தொகுதியில் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய தேர்தல் மேற்பார்வையாளர் நீத்தா பிரசாத் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டார்.

    வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டி செய்யாறு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் முதலில் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், வெம்பாக்கம் வட்டம், கரந்தை காலனி தொடக்கப் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்தல் கண்காட்சிப் பேருந்தை பார்வையிட்டார்.

    அந்தப் பள்ளியில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகத்தை பார்வையிட்டு, அதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து, காகனம் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியை பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய தேர்தல் மேற்பார்வையாளர், அந்தப் பகுதியில் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்திட ஆலோசனைகளை வழங்கினார்.

    செய்யாறு ஐடிஐ: செய்யாறு ஐடிஐயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒவியக் கண்காட்சியை பார்வையிட்ட மத்திய தேர்தல் மேற்பார்வையாளர் நீத்தா பிரசாத் முன்னிலையில், வாக்களிப்பது குறித்த உறுதிமொழியை வாக்காளர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்றனர். பின்னர், செய்யாறு தொகுதியின் தேர்தல் தூதுவராக அறிவிக்கப்பட்ட 7 வயது சிறுமி பிரித்தியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சிகளில் செய்யாறு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரபுசங்கர், வட்டாட்சியர்கள் (செய்யாறு) ரெஹீனாபேகம், (வெம்பாக்கம்) நரேந்திரன், நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, ஐடிஐ தாளாளர் ஆர்.லோகநாதன், தேர்தல் துணை வட்டாட்சியர் சுதாகர், நேர்முக உதவியாளர் பாஸ்கர், கண்காணிப்பாளர் வேணுகோபால், உதவி அலுவலர் சுகுமார் மற்றும் வருவாய்த் துறையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    வந்தவாசி: வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் வந்த மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் நீத்தா பிரசாத், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி நடைபெற்ற சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள தளவாட பொருள்களை அவர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து, வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியை பார்வையிட்ட அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி ஆய்வு செய்தார்.

    பழைய பேருந்து நிலையத்துக்கு சென்ற அவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளினுள் ஏறி 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினார்.

    மேலும், அங்கிருந்த பொதுமக்களுக்கு மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் நீத்தா பிரசாத் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.     

     பின்னர், கடந்த மக்களவை தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான தென்னாங்கூர் கிராமத்துக்குச் சென்ற மத்திய தேர்தல் பார்வையாளர், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் அனைவரும் வாக்களிக்கும்படியும், வாக்களிக்க பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்றும் பேசினார்.

    வந்தவாசி(தனி) தொகுதி தேர்தல் அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, உதவி தேர்தல் அலுவலர்கள் எஸ்.அற்புதம், ச.பாலமுருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் எஸ்.திருமலை, துணை வட்டாட்சியர் மூர்த்தி, நகராட்சி ஆணையர் எஸ்.லட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai