Enable Javscript for better performance
சதுர்த்திக்காக தயாராகும் விநாயகர் சிலைகள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்குமா? - Dinamani

சுடச்சுட

    

    சதுர்த்திக்காக தயாராகும் விநாயகர் சிலைகள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்குமா?

    By போளூர்  |   Published on : 02nd August 2016 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விநாயகர் சதுர்த்திக்காக, போளூர் பகுதியில் சிலை தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சிலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி தயாரிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, குடியிருப்புப் பகுதிகள், வீதிகள், முக்கியச் சந்திப்புகளில் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இதற்காக சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு வடிவங்கள், அளவுகளில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை போளூர், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம் வட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கி வந்து தங்கள் பகுதிகளில் வைத்து வர்ணப் பூச்சு முடித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 2 அடி முதல் 12 அடி வரையான இந்த சிலைகள், அடிக்கு ரூ.ஆயிரம் வீதம் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.

    இந்தச் சிலைகள் காகிதக் கூழ் மற்றும் களிமண்ணால் தயாரிக்கப்பட்டவையா? சுற்றுச்சூழலுக்கு உகந்ததா என்பதை ஆய்வு செய்த பிறகே விற்பனைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளபடி பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மற்றும் ரசாயனக் கலவைகளை பயன்படுத்தி சிலைகள் தயாரிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஆனால், தற்போது சிலைகளை வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து உறுப்புகளை இணைப்பது, வர்ணம் பூசுவது போன்றவை நடைபெறுகிறது. எனவே, சிலை பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் ஆனதா? வர்ணத்தில் ரசாயனம் கலந்துள்ளதா? என்பதை கண்டறிய இயலுவதில்லை. சிலை மீது பூசப்படும் ரசாயன வர்ணத்தால் சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், சிலையை கரைக்கும்போது நீர்வாழ் உயிரினங்கள் இறக்க நேரிடுவதுடன், சுற்றுச்சூழல் மாசு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, விநாயகர் சிலை தயாரிப்பை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai