Enable Javscript for better performance
குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கோட்டுப்பாக்கம் பரதேசிஆறுமுக சுவாமிகள் கோயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டனர்.

    பெரணமல்லூர் ஒன்றியம், கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். அப்போது, மூலிகைச் செடிகளை வளர்த்து அந்தப் பகுதி மக்களுக்கு மருத்துவம் செய்து வந்த அவர், வாழ்க்கையின் கடைசி காலத்தில் அந்தப் பகுதி மக்களை அழைத்து நான் ஆடி அமாவாசை அன்று ஜீவசமாதி அடைவேன். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டி ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று குருபூஜை நடத்தி, எனக்கு படைக்கும் பிரசாதத்தை திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கு வழங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று கூறினாராம்.

    இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று கோட்டுப்பாக்கம் பரதேசிஆறுமுக சுவாமிகள் கோயிலில் குருபூஜை நடத்தி, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு ஆறுமுக சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை மண்ணில் வைத்து சாப்பிடச் செய்து வருகின்றனர்.

    அதேபோல், இந்த ஆண்டு 180-ஆவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் உலக நன்மைக்காக மஹா யாகம் நடத்தப்பட்டது. சன்மார்க்க தொண்டர்கள் பஜனை ஊர்வலம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    இதன் பின்னர் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை வரம் வேண்டி கோயிலுள்ள குளத்தில் மண்டியிட்டு அமர்ந்து, பரதேசி சுவாமிகளுக்கு படைத்த பிரசாதத்தை தரையில் வைத்து கைகளை பின்னால் கட்டிக்கொண்டு சாப்பிட்டனர்.

    இதில், தமிழகம் முழுவதிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, மண் சோறு சாப்பிட்டனர். கடந்த ஆண்டு மண்சோறு சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai