Enable Javscript for better performance
கோயில்களில் குருபெயர்ச்சி விழா- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் குரு பெயர்ச்சி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    குரு பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என மூன்று விழாக்கள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் வந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி, மூன்றாம் பிரகாரத்தில் கோயில் தலவிருட்சமான மகிழமரம் கீழே உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி ஆகியவற்றில் சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன.

    இதனை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி, சம்பந்த விநாயகர், உண்ணாமுலையம்மன், அருணாசலேஸ்வரர் சன்னதிகளில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோயில் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    தண்டபாணி ஆஸ்ரமத்தில் யாகம்: திருவண்ணாமலை தண்டபாணி ஆஸ்ரமத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மகா யாகம் நடைபெற்றது. யாகத்துக்கு வாலைசித்தர் அறக்கட்டளை நிறுவனரும், வாலைசித்தர் ஆன்மிகப் பேரவையின் பொதுச்செயலருமான எல்.சீனுவாசன் தலைமை வகித்தார். பிரம்ம ரிஷி வாலைசித்தர் மகா யாகத்தைத் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, செல்வகணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், சுப்பிரமணியர் ஹோமம், அருணாசலேஸ்வரர் - அபிதகுஜாம்பாள் ஹோமம், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம், சொர்ணகர்ஷண பைரவர் ஹோமம், குபேர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.

    காலை 9.30 மணிக்கு மஹா குரு பெயர்ச்சி ஹோமம், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றன. இந்தப் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு யாகபூஜை பிரசாதங்கள், நவபாஷான ஜோதிலிங்க அபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டன. பின்னர், 500-க்கும் மேற்பட்ட சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில், வாலைசித்தர் ஆன்மிகப் பேரவைத் தலைவர் வி.பிரகாசம், அறக்கட்டளைத் தலைவர் எஸ்.டெல்லிகுமார், மாநிலத் தலைவர் அன்னமராஜா, மாநிலச் செயலர் எம்.பாலகிருஷ்ணன், மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    செங்கம்: செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் 13-ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.

    இதைத் தொடர்ந்து, மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் பரிகார அர்ச்சனை செய்து, குருவின் அருள் பெற்றனர். பின்னர், கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் சதுர்த்தி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ஆரணி: ஆரணி கைலாயநாதர் கோயிலில் குரு பெயர்ச்சி பூஜையை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai