நீப்பத்துறை பெருமாள் கோயில் ஆடிப்பெருக்கு விழா: பக்தர்கள் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர்
By செங்கம் | Published on : 03rd August 2016 12:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செங்கத்தை அடுத்த நீப்பத்துறை பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர்.
நீப்பத்துறை அலமேலு மங்கை பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், சென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான கோயில் 71-ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடந்து, 29-ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 30-ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 31-ஆம் தேதி கருட வாகனத்திலும் அலமேலு மங்கை பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, திங்கள்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆரக்கணக்கான பக்தர்கள் நீப்பத்துறை பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலுக்கு வந்து, கோயில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி, பொங்கல் வைத்து, அங்குள்ள சென்னியம்மன் பாறைக்கு பூஜை செய்து, சுவாமியை வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கு விழாவுக்கு திருவண்ணாமலை, செங்கம், அரூர், ஊத்தங்கரை, சிக்காரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் செல்வரங்கன், கோகுலவாணன் ஆகியோர் செய்திருந்தனர்.